search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விதிமுறைகளை மீறல்"

    ஊட்டியில் விதிமுறைகளை மீறி வாடகைக்கு இயக்கப்பட்ட 19 மோட்டார் சைக்கிள்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலங்கள் நிறைந்த மாவட்டமாக விளங்குகிறது. ஆண்டு முழுவதும் குளு, குளு காலநிலை நிலவுவதால் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் நீலகிரிக்கு வருகின்றனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியை மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க வருகின்றனர்.

    பல ஆண்டுகளுக்கு முன்பு சொந்த வாகனங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. இதனால் சுற்றுலா செல்லும் பொதுமக்கள் வாடகை கார்களை அதிகம் பயன்படுத்தி வந்தனர். தற்போது சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இதனால் சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ள வாடகை கார் டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் ஊட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சிலர், சொந்த பயன்பாட்டுக்கு வைத்திருக்கும் கார்கள், வேன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விட்டு வருகிறார்கள். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சுற்றுலா வாகன டிரைவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் புகார் தெரிவித்தனர்.

    இதையொட்டி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து ஊட்டி பைன் பாரஸ்ட், சூட்டிங்மட்டம் உள்பட பல இடங்களில் கடந்த சில தினங்களாக வாகன தணிக்கை செய்தனர்.

    அப்போது ஏராளமான மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களை சுற்றுலா பயணிகள் பயன்படுத்துவது தெரியவந்தது. இதைதொடர்ந்து அந்த வாகனங்களை அதிகாரிகள் தணிக்கை செய்தனர். அப்போது சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்த வேண்டிய மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 19 மோட்டார் சைக்கிள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தும் வாகனங்களை வாடகைக்கு விட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். ஊட்டியில் விதிமுறைகளை மீறி வாடகைக்கு இயக்கப்பட்ட 19 மோட்டார் சைக்கிள்களை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்ததால் சுற்றுலா வாகன டிரைவர்கள் சற்று ஆறுதல் அடைந்து உள்ளனர். 
    ×